அன்புடன் அந்தரங்கம்! | Anbudan Antharangam - Dinamalar Varamalar

Share this :

அன்புள்ள ச‌­கோதரிக்கு —
நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான்.
எனக்கு திருமணம் நடந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல்லூரியில் படிக்கின்றனர். மனைவியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தேன். நான் பணிபுரிந்த கம்பெனிக்கு, "அப்ரன்டீசாக' பணிபுரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.
அவன், அந்த கம்பெனியில் வேலைக்கு வரும் போது, உடுத்தின துணி மாத்திரம் தான்; அவனுக்கு என்று வேறு ஒரு பொருளும் கிடையாது; மாற்றுத்துணிக் கூட கிடையாது. அவனை அன்போடு ஏற்று, என் வீட்டிலேயே தங்க வைத்து, கூட பிறந்த தம்பியாகவே பாவித்து, வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து, அவனை ஒரு மனிதனாக்கினேன். அதன் பின், எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், அந்த உடன் பிறவா தம்பிக்கு, ஒரு தனி ரூம் எடுத்து, தங்க வைத்தேன். இருவரும் ­சேர்ந்து, வேலைக்கு போகும் போது, எங்களைப் பார்த்து பொறாமைப்படுவர்; அந்த அளவுக்கு அவன் மீது பாசம் வைத்திருந்தேன்.
அதன் பின், ஐந்து சென்ட் இடமும், ஐந்து சென்ட் பரப்பளவில் கட்டப்பட்ட பெரிய வீடும் வாங்கினேன். எங்களுக்கு, ஒரு ஆண், ஒரு பெண் என, இரண்டு குழந்தைகள். புது வீட்டில் குடியேறிய பின், உடன் பிறவா அந்த சகோதரனையும், என்னுடன் புதுவீட்டிலேயே தங்க வைத்தேன். நான் செய்த மிகப் பெரிய தவறு இதுதான். நாளடைவில் என் மனைவியையும், குழந்தைகளையும் பிரித்து, என் மனைவியை திருமணம் செய்து கொண்டான்; வீடு மற்றும் சொத்துக்களை, மிரட்டி, எழுதி வாங்கி, என்னை வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான். பல பெரிய மனிதர்களை சந்தித்து, விவரம் கூறியும், காவல் நிலையத்தில் புகார் செய்தும், எவ்வித பயனும் இல்லை. எனவே, வேலையை ராஜினாமா செய்து, வெளியூரில் வேறு வேலையில் சேர்ந்தேன்.
தற்போது சேர்ந்த கம்பெனியில், என்னைப் பற்றிய, விவரம் எதையும் தெரிவிக்கவில்லை. பார்க்க, வயதிலும், தோற்றத்திலும் இளமையாகவே காட்சியளிப்பேன். எனவே, திருமணம் ஆகாதவன் என்றே எல்லாரும் நினைத்துக் கொண்டனர். முதல் மனைவி வாழ்ந்தது ஏழு வருடம் மட்டும்தான்; அதன்பின், இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. என்னுடன் பணிபுரிந்த ஒருவர், எனக்கு பெண் பார்த்தார். அவரிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், "என் மனைவி இன்னொருவனுடன் ஓடி விட்டாள்!' என்று எப்படி சொல்ல முடியும். எனவே, அதை அவரிடம் மறைத்து, "இப்போது திருமணம் வேண்டாம்...' என, சமாளித்து பார்த்தேன்; முடியவில்லை.
இரண்டாவது திருமணம் முடிந்தது; காலங்கள் ஓடின. ஒரு பெண், ஒரு ஆண் என, இரண்டு குழந்தைகள். திருமணம் ஆன நாளிலிருந்து, என் மனைவி வறட்டு கவுரவம், பிடிவாதம், அவர் செய்வது தான் சரி என்பார். எனக்கும், மனைவிக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒத்துப் போவதில்லை. நான் என்ன செய்தாலும், குறை சொல்வதும், குற்றம் கண்டுபிடிப்பதாகவும் தான் இருப்பாள்.
நடந்த தவறுக்கு, மனதிற்குள்ளேயே அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன். அப்படி இருந்தும், அவளை அதிகமாக நேசித்தேன். கிட்டதட்ட, 15 வருடங்கள் கழித்து என்னைப் பற்றிய விவரங்கள், அவளுக்கு ஒரு உறவினர் மூலம் தெரியவர, பூகம்பம் வெடித்தது. அவளுடைய அண்ணன், அண்ணியிடம், என் அண்ணன், அண்ணியிடம் தகவல் பறந்தன. அவள் அண்ணன் வீட்டிலும், "இனி மேல் ஒன்றும் செய்ய முடியாது' எனக்கூறி விட்டனர்.
இதை கேட்டு அடங்கியவள், என்னை பழிவாங்க ஆரம்பித்தாள். மாதா மாதம், 9,000 ரூபாய் அவளிடம் கொடுப்பேன். அதை மட்டும் வாங்கிக் கொள்வாள். ஆனால், சரியாக சாப்பாடு கொடுக்க மாட்டாள். சுடு சொற்களால், சித்திரவதை செய்வாள். இரண்டு பிள்ளைகளையும், மதிக்காத அளவுக்கு வளர்த்தாள். அவளுக்கு, செய்த துரோகத்திற்கு, எந்த அளவிற்கு கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவிக்க வேண்டுமோ அவ்வளவு அனுபவித்து விட்டேன். இப்போது எனக்கும், அவளுக்கும், பேச்சுவார்த்தையே இல்லை. இப்படி செத்து செத்து பிழைப்பதற்கு பதில், ஒரேயடியாக தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் நாளுக்கு நாள் ஏற்படுகிறது. என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இப்போது என் வயது, 49 மனைவிக்கு, 42. உங்களது நல்ல தீர்வுக்காக காத்திருக்கிறேன்.
ஜோதிடர் ஒருவர், "நீ எத்தனை திருமணம் செய்தாலும், நிம்மதியுடன் இருக்க முடியாது...' என்றார். அது போல­வே நடந்து கொண்டிருக்கிறது. அவள், என்னை மன்னிப்பாளா? இந்த உலகம் மன்னிக்குமா? நரக வேதனையில் இருந்து விடுதலை கிடைக்குமா? உங்களது முடிவுதான் என் தலை எழுத்தை நிர்ணயிக்கும்.
— இப்படிக்கு
அன்பு ச­கோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு—
இரு நம்பிக்கை துரோகங்களின் தொகுப்புதான், உங்கள் கடிதம். ஒரு அன்னியனுடன் சேர்ந்து, உங்கள் மனைவி, செய்தது முதல் நம்பிக்கை துரோகம். துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது துணையை தேடி, அப்பெண்ணிற்கு நீங்கள் செய்தது, இரண்டாவது நம்பிக்கை துரோகம்.
எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம், நீங்களும், உங்கள் குணாதிசயங்களும் தான். பிறர் மீது இரக்கமும், அனுதாபமும் காட்டலாம்; ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
பணியிடத்தில், பயிற்சியாளனாக சேர்ந்த ஒரு அனாதை இளைஞனை, திருமணமான நீங்கள், உங்கள் வீட்டிலேயே தங்க வைத்தது, அபத்தமான செயல். வயதிலும், தோற்றத் திலும் மிகச் சிறியவனாய் காட்சியளிக்கும் உங்களை விட, அவன் மேலானவன் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் முதல் மனைவி.
காலி மனையையும், வீட்டையும், போராடி, திரும்பப் பெறாமல், கோழைத்தனமாக, பார்த்த வேலையை உதறிவிட்டு, வெளியூர் ஓடி விட்டீர். புதிதாக பணி சேர்ந்த நிறுவனத்தில், உண்மைகளை சொல்லாமல், மறைத்து விட்டீர்.
அலுவலக நண்பர், பெண் பார்க்கும் போது, துணிச்சலாக உண்மையை கூறியிருக்க வேண்டும் அல்லது முதல் மனைவியிடமிருந்து சட்டரீதியாக விவாகரத்து பெறும் முயற்சியிலாவது, இறங்கியிருக்க வேண்டும்.
குட்டு வெளிப்படுவதற்கு முன்னிருந்தே, உங்களின் இரண்டாம் மனைவி, அதிருப்தியாய் இருந்திருக்கிறாள். குட்டு வெளிப்பட்டதும், அதிருப்திக்கும் சேர்த்து வட்டியும், முதலுமாய் தாளித்தெடுத்து விட்டாள்.
ஜோதிடரிடமும் ஆலோசனை கேட்டுள்ளீர். அவரும், கணிசமாக பணம் பெற்றுக்கொண்டு, நீங்கள் விரும்பும் சாக்குபோக்கை கூறியுள்ளார். குடிப்பது, புகைப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு ஏமாளி, கோழை, தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் குழப்பவாதி, புலம்பல் ஆசாமி.
தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது.
இனி, என்ன செய்ய வேண்டும் தெரியுமா சகோதரரே...
முதல் மனைவி மீது, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, முறைப்படி விவாகரத்து பெறுங் கள். விவாகரத்து பெற்றதும், இரண்டாம் திருமணத்தை அதிகாரப்பூர்வமானதாக்குங்கள்.
இரு தரப்பு பெரியவர்களை வைத்து, உங் களுக்கும், இரண்டாம் மனைவிக்கும் இடையே சமாதானத்தை நிலை நாட்டுங்கள்.
கல்லூரியில் படிக்கும் இரு குழந்தைகளிடம், உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி, அவர்களுடன் ராசியாகுங்கள். பிரச்னைகளை பெரிதாக்கி, இந்த வேலையையும் விட்டு விடாதீர்கள். அது, இரண்டாம் மனைவியுடனான மன கசப்பை அதிகப்படுத்தும்.
உங்கள் வாழ்க்கையில் சாந்தியும், சமாதானமும் பூக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.